திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த தஞ்சை பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் உயர் ரக கஞ்சா (ஹைட்ரோபோனிக் கஞ்சா) இருப்பது கண்டறியப்பட்டது.
இது ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா ஆகும். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி வந்த தஞ்சையை சேர்ந்த அப்துல் அமீரை கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இவர் யாருக்காக கஞ்சா கடத்தி வந்தார், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த ஒரு பயணி, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகளை டப்பாக்களில் அடைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 2,477 ஆமை குஞ்சுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஆமை குஞ்சுகள் ஒப்படைக்கப்பட்டது. ஆமை குஞ்சுகள் கடத்தி வந்த நபரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் உயர் ரக கஞ்சா, ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.



