பிக்கட்டி டாஸ்மாக் கடையை 10 கி.மீட்டர் தூரத்துக்கு அகற்ற வலியுறுத்தி பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்த முடிவு
ஊட்டி : பிக்கட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை 10 கி.மீட்டர் தூரத்துக்கு அகற்ற கோரி கோத்தர் பழங்குடியின மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் வாழும் கோத்தர் பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிக்கட்டி பகுதியல் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2016ம் ஆண்டு மனு அளித்திருந்தோம். இதனை ஏற்று இப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
ஆனால், மீண்டும் 2017ம் ஆண்டு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இப்பகுதியில் இரவோடு இரவாக கடை திறக்கப்பட்டது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால், இப்பகுதியில் உள்ள எங்கள் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மதுபானத்திற்கு அடிமையாகி வருகின்றனர். சிலர் உயிரிழந்துவிட்டனர். எனவே, இந்த கடையை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்து வருகிறோம்.
ஆனால், எவ்வித பயனும் ஏற்படவில்லை.மேலும், எங்கள் கிராமத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, கலெக்டரிடம் நேரடியாக இரு முறை மனு அளிக்கப்பட்டது. எவ்வித பயனும் ஏற்படவில்லை.
தற்போது எங்கள் கிராமத்தில் உள்ள இளைர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால், எங்களது குடும்பத்தின் நிம்மதியும் பாதித்துள்ளது. எனவே, உடனடியாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
குறைந்தபட்சம் எங்கள் கிராமத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிற்கு இந்த மதுக்கடையை ெகாண்டுச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இந்த மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.