ஓடும் பேருந்தின் மீது சாய்ந்த மரம்; டிரைவர் உட்பட 5 பேர் உடல் நசுங்கி பலி: உதவ மனமின்றி வீடியோ எடுத்த அவலம்
பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டம் ஜைத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் நின்றிருந்த பழமையான ராட்சத மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து, அவ்வழியாக வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்தின் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில், ஓட்டுநர் சந்தோஷ் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காயங்களுடன் பேருந்துக்குள் சிக்கியிருந்த ஷைல் குமாரி என்ற பெண்,
விபத்தை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கோபத்துடன், ‘நாங்கள் இங்கே செத்துக் கொண்டிருக்கிறோம், நீங்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று ஆவேசமாகப் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையும், உள்ளூர் நிர்வாகமும் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.