கணவரின் சிகிச்சைக்கான செலவை கேட்டு ஆசிரியை வழக்கு மருத்துவ செலவை 3 மாதங்களில் வழங்க தொடக்க கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சேலம் மாவட்டம் அம்மாபாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி ஆசிரியை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவு ரூ.3 லட்சத்து 64,103ஐ தரக்கோரி தொடக்கக் கல்வி துறை இயக்குனர் மற்றும் சேலம் மாவட்ட வட்டார கல்வி அதிகாரிக்கும் மனு அனுப்பினேன். எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனது கணவரின் மருத்துவ செலவை தருமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதி குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.அன்பரசன் ஆஜரானார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் கணவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனை மிக பிரபலமான மருத்துவமனை. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான வசதி இருந்தாலும் மனுதாரருக்கு கோவை மருத்துவமனையின்மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது.
அந்த நம்பிக்கையை ஒரு காரணமாக கருதி அவருக்கு சிகிச்சைக்கான செலவை தர முடியாது என்று கூற முடியாது. அவரது மனுவை நிராகரித்த தொடக்கல்வி துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரது கணவரின் மருத்துவ செலவு தொகையை 3 மாதங்களுக்குள் தொடக்க கல்வித்துறை தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.