சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 900க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பாதுகாப்பற்ற முறைகளில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறையைப் சார்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளி அன்று சிறப்பு சிகிச்சை வார்டுகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மொத்தம் 900க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீக்காயத்தால் புற மருத்துவ பயனாளிகளாக ஆண்கள் 344 பேரும், பெண்கள் 54 பேரும், ஆண் குழந்தைகள் 116 பேரும், பெண் குழந்தைகள் 70 பேரும் பயனடைந்துள்ளனர். அதேபோல உள் பயணாளிகளாக 324 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 248 பேரும், பெண்கள் 21, ஆண் குழந்தைகள் 42, பெண் குழந்தைகள் 13 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெரிய அறுவை சிகிச்சையை 85 பேருக்கும், சிறிய அறுவை சிகிச்சையை 380 பேருக்கும் கண் மருத்துவம் சார்ந்த சிகிச்சையை 93 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்டாசாக கடலூர் மாவட்டத்தில் 29 பேரும், திருவண்ணாமலையில் 25 பேரும், மதுரையில் 21 பேரும், திருச்சியில் 18 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 16 பேரும் உள் மருத்துவ பயனாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பொறுத்தவரையில் பட்டாசு தீக்காயங்களால் 12 உள் சிகிச்சை பயனாளிகள் தீக்காய சிகிச்சை சிறப்பு பிரிவில் அனுமதிப்பட்டனர். 18 புற சிகிச்சை பயனாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 12 உள் சிகிச்சை பயனாளிகளில் 9 பேர் சிறுவர், சிறுமிகள், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் தீக்காய சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.