சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி பாலு இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரேணுகாதேவி மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
* அமைச்சர் தங்கம் தென்னரசு
கழகப் பொருளாளர், மக்களவை திமுக குழுத் தலைவர் அண்ணன் டி.ஆர். பாலு அவர்களின் இணையரும், நம் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகாதேவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இத்துயர்மிகு தருணத்தில் வாடும் அண்ணன் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களின் கரம் பற்றி எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நம் கழக உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* தமிழச்சி தங்கபாண்டியன்
கழக பொருளாளர் - கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர், அப்பா டி.ஆர்.பாலு எம்.பி அவர்களின் மனைவியும், தொழில்துறை அமைச்சர், தம்பி டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேனுகாதேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனையும், துயரமும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும், அப்பா டி.ஆர்.பாலு அவர்களுக்கும், தம்பி டி.ஆர்.பி.ராஜா, குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துக்கொள்கிறேன்
* ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்
திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர் டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது. பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
* திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ்
கழகப் பொருளாளர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், தொழிற்துறை அமைச்சர்; கழக தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. பாசத்திற்குரிய அம்மையாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்
* டிடிவி தினகரன்
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் டி.ஆர் பாலு அவர்களுக்கும், டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
* நயினார் நாகேந்திரன்
திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அம்மையாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன்.