Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமானத்தில் பயணம் செய்த போது போதையில் பணிப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தொழிலதிபருக்கு 15 மாதம் சிறை: மனநலம் பாதிக்கப்பட்டவர் என பாக். மனைவி வாதம்

லண்டன்: விமானப் பணிப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைக்குச் சென்ற தொழிலதிபரின் செயலுக்கு மனநல பாதிப்பே காரணம் என அவரது மனைவி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபரான சல்மான் இப்திகார், கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டனில் இருந்து லாகூர் சென்ற விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் முதல் வகுப்பில் தனது மூன்று குழந்தைகளுடன் பயணம் செய்தார். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், விமானப் பணிப்பெண் ஆங்கி வால்ஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை இனவெறியர் எனத் திட்டியதோடு, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடுவதாக கொடூரமான முறையில் மிரட்டியுள்ளார். மேலும், சக ஆண் ஊழியர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளார்.

விமான ஊழியர்கள் அவரைச் சமாளித்து இருக்கையில் அமர வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து காவல்துறை கடந்த மார்ச் 16ம் தேதி சல்மானை கைது செய்தது. ஐல்வொர்த் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அவர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, 14 மாதங்கள் பணிக்குச் செல்ல முடியவில்லை என விமான பணிப்பெண் ஆங்கி வால்ஷ் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலையில், சல்மானின் மனைவியும், பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமுமான அபீர் ரிஸ்வி, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களில் தனது கணவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘மனநலம் என்பது நகைச்சுவையான விசயம் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு பின்னாலும் நீங்கள் காணாத வலி ஒன்று இருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன், புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு, தனது கணவரின் செயல்களுக்கு மனநல பாதிப்பே காரணம் எனக் கூறியுள்ளார். சல்மான் இப்திகாருக்கு இங்கிலாந்தில் வசிக்கும் எரும் சல்மான் என்ற மற்றொரு மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிக்கு அவரது மனைவி ஆதரவாகப் பேசுவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.