போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வுகால பலன்கள் வழங்க ரூ.1,137 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: 2023-2024ம் ஆண்டில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் வழங்க ரூ.1,137 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வு பெறும் நாளில் இருந்து அவர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்து கழகங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் வழங்க ரூ.1,137.97 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஓய்வுகால பலன்களாக ரூ.265 கோடி விடுவிக்கப்பட்டது. அதேபோல், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 2025ம் ஆண்டு காலக்கட்டத்தில் பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 2023ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி வரை ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்க ரூ.2,450 கோடி ஒதுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதனை பரிசீலனை செய்ததையடுத்து 2023-2024ம் ஆண்டிற்கான முதற்கட்ட தொகையாக ரூ.1,137.97 கோடி நிதிஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இதில் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.157.81 கோடி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் - ரூ.54.41 கோடி, விழுப்புரம் போக்குவரத்து கழகம் - ரூ.152.29 கோடி, சேலம் போக்குவரத்து கழகம் - ரூ.97.35 கோடி, கோவை போக்குவரத்து கழகம் - ரூ.153.29 கோடி, கும்பகோணம் போக்குவரத்து கழகம் - ரூ.235.63 கோடி, மதுரை போக்குவரத்து கழகம்- ரூ.141.26 கோடி, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு ரூ.145.93 கோடி என ஒட்டுமொத்தமாக ரூ.1,137.97 கோடி விடுவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.