சென்னை: சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை போக்குவரத்து கழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டன. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற 2025 ‘அர்பன் மொபிலிட்டி இந்தியா’ மாநாட்டில் சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் செயல்திறன், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு விருது கிடைத்தது.
ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் இருந்து தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சென்னை எம்.டி.சி மேலாண் இயக்குனர் பிரபுசங்கர் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். மெட்ரோவுக்கும் விருது: அதேபோல், சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் என்ற பிரிவின் கீழ் நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபால், மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக் ஆகியோர் ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

