Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் அருகே பயங்கரம்; இரும்பு ராடால் அடித்து திருநங்கை படுகொலை: உடன் பழகிய வாலிபர் மாயம்: பரபரப்பு தகவல்

சேலம்: சேலத்தில் திருநங்கை இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னமாபேட்டை வடக்கு ரயில்வே லைனை சேர்ந்தவர் மனோகரன், தங்க ஆசாரி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு பவளம், மரகதம், கதிர்வேல், காயத்ரி, சரவணன் (21) ஆகிய மகள், மகன் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக சரவணனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் திருநங்கைகளுடன் பழக தொடங்கினார். இதையடுத்து கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரை வனிதா எனவும் மாற்றிக்கொண்டார். இவரது சகோதர, சகோதரிகளுக்கு திருமணமாகி அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பொன்னமாபேட்டை ரயில்வே கேட்டின் மறுபுறம் வனிதாவின் தாய், தந்தை வசித்து வருகின்றனர்.

வனிதா மட்டும் வடக்கு ரயில்வே லைன் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். வனிதாவுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வனிதா நவீனுடன் பொன்னமாபேட்டை பகுதியில் சென்றதை சிலர் பார்த்துள்ளனர். இதனிடையே இன்று காலை 11 மணியளவில் வனிதாவின் சகோதரி மரகதம் வனிதாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் வனிதா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மரகதம் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அதில், அவர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து போன சரவணன் என்கிற வனிதாவை, செல்வி என்ற திருநங்கை தனது மகளாக கவனித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் விழுப்புரத்திற்கு வனிதாவை அழைத்து சென்று அங்கு திருநங்கையாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைகளை செய்ய செல்வி ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக சுமார் ரூ.1.5லட்சம் வரை அவர் செலவு செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த வனிதாவின் தாய், விழுப்புரம் சென்று தனது மகனை நானே பார்த்துக்கொள்கிறேன் என அவரை அழைத்துக்கொண்டு சேலம் வந்துள்ளார். அதன் பின்னர் தான் வனிதா தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும் வீட்டின் அருகேயுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் பூசாரியாகவும் வனிதா இருந்து வந்துள்ளார்.

மதுஅருந்தும் பழக்கம் உள்ள வனிதா கடந்த ஆடி மாதம் 18 அன்று வெண்ணங்குடி முனியப்பன் கோயிலுக்கு சென்று, இனிமேல் மதுஅருந்த மாட்டேன் என கையில் கயிற்றை கட்டி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் பணம் தொடர்பான பிரச்னையும் வனிதாவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு பணப்பிரச்னை தொடர்பாக நவீனுக்கும் வனிதாவுக்கும் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நவீன் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.