திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் ஊராட்சி பாக்குப்பேட்டை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008ம் ஆண்டு 100 கே.வி. திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றி 17 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் நிலையில் குடியிருப்புகள் அதிகமானதால் மணவாள நகர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பாக்குப்பேட்டை கிராம மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு மும்முனை மின்சாரத்தில் ஒரு முனை மின்சாரம் பழுதடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு மின் அழுத்தம் காரணமாக குறைந்த மின்சாரம் மட்டுமே கிடைப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏசி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங் மெஷின் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மணவாள நகரில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.