காளையார்கோவில் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அனைத்து மாணவர்களிடமும் அறிவியல் மனப்பான்மையை எடுத்துச் செல்லும் விதமாக 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் 17 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அறிவியல் விஞ்ஞானிகளாக மாற்றும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில் கூட்டரங்கில் இந்த ஆண்டிற்கான கருப்பொருளான \”நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை” என்னும் தலைப்பில் சிவகங்கை மானாமதுரை காளையார்கோவில் இளையான்குடி ஒன்றியங்களில் பணியாற்றும் 100க்கு மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத் தலைமை வகித்தார். காளையார்கோவில் கிளைத் தலைவர் வீரபாண்டி, சிவகங்கை கிளைத் தலைவர் மணவாளன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் அலெக்ஸாண்டர் துரை வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி அறிமுக உரையாற்றினர்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில் முதல்வர் முருகன் அறிவியல் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆய்வுக் குறித்து குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கருத்துரையாற்றினார்.
பயிற்சியில் நீரினால் பரவும் நோய்கள், நீர் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுத்திகள், நீர் சார்ந்த சுகாதாரம் பொது மருத்துவம், நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் அனைவருக்குமானது என்ற தலைப்புகளில் முனைவர்கள் சேவற்கொடியோன், சூசை ஆரோக்கிய மலர் சியாமளா, மணிவண்ணன், கோபிநாத் காளிதாஸ் பிரபு ஆரோக்கியசாமி ஆகியோர் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான வழிமுறைகளை செயலாக்கம் கொடுத்து கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் லதாதேவி பொன்னி வாழ்த்துரை வழங்கினர். மாவட்டக் கௌரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் நன்றி கூறினார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேவற்கொடியோன், மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.