ரயிலில் பயணம் செய்ய பயணிகள் இ-டிக்கெட் எடுத்தால் 45 பைசாவில் பயணக்காப்பீடு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
புதுடெல்லி: ரயில் பயணக்காப்பீடு திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அனைத்து ரயில் பயணிகளும் ஆன்லைன் முறையிலோ அல்லது முன்பதிவு கவுண்டர்களிலோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், விருப்ப பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த உறுதிப்படுத்தப்பட்ட அல்லது ஆர்ஏசி பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும். காப்பீட்டுப் பலனைப் பெற விரும்பும் எந்தவொரு பயணியும் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு நாற்பத்தைந்து பைசா மட்டுமே பிரீமியம் ெதாகை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் பயணிகள் கோரிக்கைகளை தொடர்பாக 333 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 27.22 கோடி தொகை காப்பீட்டு நிறுவனங்களால் பயணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
* அனைத்து பெட்டிகளிலும் உயிரி கழிப்பறை
பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து பிரதான ரயில் பெட்டிகளிலும் உயிரி கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ ரயில் பாதைகளில் மனிதக் கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதைத் தடுக்கவும், சுகாதாரம் மற்றும் தூய்மையை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே அதன் பெட்டிகளில் பூஜ்ஜிய-வெளியேற்ற உயிரி கழிப்பறை முறையை அமல்படுத்தி உள்ளது. இதனால் ரயில் பாதைகளில் மனித கழிவுகள் இல்லாமல், பராமரிப்பு பணிகளின் தரத்தை உறுதி செய்வதால், ரோலிங் ஸ்டாக் மற்றும் ரயில் பாதைகளின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.