பொங்கலுக்கு முந்தைய நாள் பயணத்திற்கு 5 நிமிடத்தில் முடிந்த ரயில் டிக்கெட் புக்கிங்: முக்கிய வழித்தடங்களில் அனைத்து ரயில்களும் நிரம்பின
சேலம்: பொங்கலுக்கு முந்தைய நாள் ரயில்களில் பயணிக்க இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், முதல் 5 நிமிடத்தில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் அனைத்து ரயில்களும் நிரம்பின. இடமில்லாத நிலை வந்துள்ளதால், சிறப்பு ரயில்களை எதிர்நோக்கி பயணிகள் காத்திருக்கின்றனர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையை நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது சொந்த கிராமங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக பயணத்தை முன்கூட்டியே தீர்மானித்து, பஸ், ரயில்களில் டிக்கெட் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் போக்குவரத்தை பொருத்தளவில் 60 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால், பொங்கல் பண்டிகை விடுமுறை கொண்டாட்டத்திற்கான டிக்கெட் புக்கிங் கடந்த 11ம் தேதி தொடங்கியது.
இதில் இன்று, பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது 14ம் தேதி (புதன்கிழமை) பயணம் மேற்கொள்ள டிக்கெட் புக்கிங் நடந்தது. காலை 8 மணிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கியதும், பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு குறிப்பிட்ட ரயில்களில் டிக்கெட் புக்கிங்கை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கும் டிக்கெட் புக்கிங் செய்வதில் பயணிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால், சென்னை-திருச்சி-மதுரை-நாகர்கோவில் மார்க்கம் மற்றும் சென்னை-சேலம்-கோவை மார்க்கம் ஆகியவற்றில் இயங்கும் ரயில்கள் அனைத்திலும் டிக்கெட் புக்கிங் துவங்கிய 5 நிமிடத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பின.
பெரும்பாலான ரயில்களில் இடமில்லை (ரிக்ரிட்) என்ற நிலை வந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, பொதிகை, குருவாயூர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு, ஏசி வகுப்பு என அனைத்து இருக்கைகளும் நிரம்பி இடமில்லை என்ற நிலை வந்துள்ளது. இதேபோல், கோவை மார்க்கத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், ஏற்காடு, சேரன், மங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் நிரம்பி இடமில்லை என்ற நிலை வந்துவிட்டது. டிக்கெட் புக்கிங் துவங்கிய 5 நிமிடத்திற்குள் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டதால், பொங்கலுக்காக சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இதனால், மிக விரைவில் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


