திருச்சியில் - தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரயில் திருவெறும்பூரில் இன்று முதல் நின்று செல்லும்: துரை வைகோ
சென்னை: திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரயில் திருவெறும்பூரில் இன்று முதல் நின்று செல்லும் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் பயன் பெறும் வகையில் வெற்றி பெறும் எனது முயற்சிகள் ஒவ்வொன்றுமே மகிழ்ச்சிதான். அதில் பங்கெடுப்பதில் உள்ள மகிழ்ச்சியோ அதைவிடப் பெரிதுதான். எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, திருவெறும்பூர் மக்களின் கோரிக்கைக்காக நான் மேற்கொண்ட தொடர் முயற்சிக்குப் பலனாக, திருச்சி - தாம்பரம் சிறப்பு இரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று (15.10.2025) முதல் நின்று செல்லும் என்ற அறிவிப்பை தென்னக ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளோம்.
அதன் முதல் நாளில் எனது தொகுதி மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக, இன்று காலை 5:30 மணியளவில் திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தேன். அப்போது, மேள தாள நாகசுர மங்கல இசையோடு முதன்முதலாக வந்து நின்ற திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலை வரவேற்றதுடன், அதில், வந்திறங்கிய பயணிகளுக்கும், அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி, வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதோடு, அவர்களோடு அதே இரயிலில் தஞ்சை வரை பயணித்தேன். இந்தப் பயணத்தில் பயணிகளுடனான உரையாடல்கள் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியதன் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தன.
பலர், தங்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கட்டணச் செலவும் குறையும் என்று கூறி நன்றி தெரிவித்தனர். பெறுகிற வெற்றியில் சிறிதென்றோ பெரிதென்றோ ஒன்றுமில்லை. இனி எத்தனை மக்கள் இந்த ரயில் பயணத்தில் பயன்பெறுவர் என்பதில்தான் வெற்றியின் அளவு தீர்மானிக்கப்படும். இதனால் பயன்பெறும் லட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சியும் வெற்றியுமே எனது வெற்றியாகக் கணக்கில் கொள்ளப்படும். இத்தகைய முயற்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதோடு, பொது போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன என்பதை அறிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.