தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த நீதியரசனின் மகன் அருண் (18). கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவார். நேற்று மாலை தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு தனது செல்போனுடன் சென்ற அருண், மின்சார ரயில் இன்ஜின் மீது ஏறி நின்று ரீல்ஸ்க்காக செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அதே நேரத்தில் ரயிலை பிடித்தவாறு நின்றிருந்த அருணின் நண்பர்கள் ராஜகோபால்நகரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் கவின்(14) மற்றும் ஹரீஷ் (17) ஆகியோரும் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
