Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பூர் வழியாக செல்லும் ரயில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநில பயணிகள் அட்டூழியம்: கண்டுகொள்ளாத தெற்கு ரயில்வே; பெண்கள், வயதானவர்கள் குமுறல்

திருப்பூர்: திருப்பூர் வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநில நபர்கள் அட்டூழியம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முக்கிய நகரங்களில் பலரும் ரயில் மூலமாகவே பணிக்கு செல்கின்றனர். இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் என்று விதவிதமான ரயில்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் அண்மை காலங்களில் வட மாநில பயணிகளின் அத்துமீறலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கும்பமேளாவின்போது வட மாநில பயணிகள், ஏசி பெட்டிகளில் செய்த சேட்டைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்பதிவு செய்யாமல், கண்ணாடிகளை உடைத்து ஏசி பெட்டிகளுக்குள் வரத் தொடங்கினர்.

அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் மக்கள் ரயில்களில் அனுபவிக்கும் துன்பங்களை எவ்வளவு கூறினாலும் போதாது. இந்த நிலையில் திருப்பூரிலும் வடமாநில பயணிகள் ரயில்களில் அத்துமீற தொடங்கி இருக்கின்றனர். திருப்பூர் வழியாக செல்லும் பாட்னா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடிக்கு முன்பதிவு செய்த பெட்டியில் 13 பேர் பயணித்திருக்கின்றனர். இந்த ரயிலில் ஏறியது முதல் பட்ட அவதிகளை பெண் பயணிகள் சிலர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 3 பெண்கள் பேசியதாவது: எர்ணாகுளத்தில் இருந்து ரயிலில் ஏறியதில் இருந்து ஸ்லீப்பரில் படுக்க கூட முடியவில்லை. திருப்பூரில் ரயில் நின்றபோது 5 டிடிஆர் இருந்தனர். அவர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஓபன் டிக்கெட் எடுத்துவிட்டு வடமாநில பயணிகள் அத்தனை பேரும் இந்த பெட்டியில் ஏறிவிட்டார்கள். எங்களால் சீட்டில் உட்கார கூட முடியவில்லை. தூங்க முடியவில்லை. டிடிஆரிடம் சென்று புகார் கொடுத்தாலும் கண்டுகொள்ளவில்லை. ஆர்பிஎப் நபர்களிடம் கூறினால், எந்த ரியாக்‌ஷனும் இல்லை. 193க்கு போனில் அழைத்தால், அது ஹோல்டிலேயே வைத்திருக்கிறார்கள். இரவு முதல் இப்போது வரை இப்படியே உட்கார்ந்து வந்துள்ளோம். ரிசர்வ் செய்து பணம் கொடுத்து வந்தால், உட்கார்ந்தே வர வேண்டுமா. வழிவிடு என்று சொன்னால் கூட வழி கொடுக்க மறுக்கிறார்கள். பெண்களால் கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை. பாத்ரூம் கூட போக முடியாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. தூங்குவோரை கூட தூங்கவிடாமல் அவர்களின் கால்களில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் குட்கா போட்டு துப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

கொஞ்சம் கூட நாகரீகமே இல்லை. ஒரு சிலர் ஓபன் டிக்கெட் எடுத்தார்கள். ஒரு சிலர் டிக்கெட்டே எடுக்கவில்லை. டிக்கெட் எடுக்காதவர்களுக்கு அபராதம் மட்டுமே போடுகிறார்களே ஒழிய, அவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்த மறுக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் ரிசர்வ் பெட்டியில் அவ்வளவு பேர் அமர்ந்திருப்பது முழுமையாக காட்டப்பட்டுள்ளது. டிடிஆர் உடன் நடக்கும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு டிடிஆர், நான் முழுமையாக செக் செய்துவிட்டேன்.. அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறது, என்கிறார். மற்றொரு நபரோ, தனி ஒருவனாக நான் என்ன செய்ய முடியும் என்கிறார். மற்றொருவர் மக்கள் இங்கு ஏறிவிட்டார்கள். அதற்கு என்ன செய்வது என்று சாதாரணமாக கேட்டு செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.