ரயிலில் எடுத்துச்சென்ற பணம் மீண்டும் போலீசில் சிக்கியதால் கவலையில் விழுந்த அல்வா ஊர் தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஸ்டார் காக்கிகள் உள்பட 10 வருஷமா ஸ்டேஷனையே கண்ட்ரோல்ல வைச்சிருப்பவரால சக காக்கிகள் குமுறுறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகா பொன்னான ஆறு ஓடுற ஏரியா லிமிட்ல, காக்கிகள் நிலையம் இருக்குது.. இங்க 10 வருஷத்துக்கு மேலாக ரைட்டிங் டிபார்ட்மெண்ட்ல பெயர்ல பணத்தை வெச்சிருக்குறவரு பணிபுரிஞ்சிட்டு வர்றாரு.. அந்த காக்கிகள் நிலையத்துல இவர் வெச்சதுதான் ரூல்ஸ் ஆம்.. ரெண்டு ஸ்டார் காக்கிகள் யார் வந்தாலும் இவர் சொல்றதுதான் கேட்கணுமாம்.. கேட்பாங்களாம்.. இப்படி அந்த நிலையத்தையே கண்ட்ரோல்ல வெச்சிருக்குறாராம்.. கடந்த மாதம் இந்த பகுதியில ஒரு ஆக்சிடென்ட் நடந்ததாம்.. இதுல முக்கிய குற்றவாளியை காப்பாத்த ரெண்டு எல் வரைக்கும் பேரம் பேசி, வாங்கிட்டாராம்.. ஸ்டார் காக்கிகளுக்கும் கிள்ளி கொடுத்துட்டு இவரு அள்ளிக்கிட்டாராம்.. இதே போல ஸ்டேட் பார்டர்ல சமீபத்துல சிக்குன சேண்ட் மாபியாகிட்ட ஒரு எல் வாங்கிட்டு அந்த கடத்தல் வண்டிய விட்டுட்டாங்களாம்.. அது பெரிய பஞ்சாயத்து ஆயிருச்சாம்.. இவர் எது செய்தாலும் நடவடிக்கை இல்லையாம்.. இப்படி இருக்குற நேரத்துல புதுசா வந்த ஸ்டார் காக்கி இவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறாராம்.. இப்படி 10 வருஷமாக ஸ்டேஷனையே கண்ட்ரோல்ல வெச்சி ஆட்டி படைக்குற காக்கி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கணும்னு சக காக்கிகளே குறையை கோரிக்கையா சொல்லி தீர்க்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வந்தே பாரத் ரயிலில் 10 லகரத்துடன் சிக்கிட்டாராமே அல்வா ஊர் எம்எல்ஏ ஆதரவாளர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா ஊரின் எம்எல்ஏ ரயிலில் பணம் கொண்டு வரும் போதெல்லாம் போலீசிடம் கனகச்சிதமாக சிக்கி விடுகிறதாம்.. அந்த அளவுக்கு அவருக்கு உட்கட்சி எதிரிகள் முதுகில் குத்தி விடுகிறார்களாம்.. கடந்த மக்களவை தேர்தலின் போது சென்னை தாம்பரத்தில் இருந்து அல்வா ஊரின் எம்எல்ஏக்கு வந்த ரூ.5 ‘சி’ பணத்தை கடைசி நேரத்தில் சென்னை போலீசார் பறிமுதல் செய்தாங்க.. அப்போது அந்த பணம் அல்வா ஊரின் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பா வழக்கும் பதிவானது. இந்நிலையில், அடுத்த சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அவரது ஆதரவாளரான, கலரான பார்வையாளர் 10 லகரங்களுடன் வந்தே பாரத் ரயிலில் போயிருக்காரு.. அதை ஸ்கெட்ச் போட்டு கடலை மிட்டாய்க்கு பேமசான ஊரில் வைத்து போலீசார் மடக்கி விட்டாங்களாம்.. தொடர்ந்து, அவரிடம் விசாரணையில், இது வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான பணிக்கு கொண்டு செல்வதற்கான பணம் என கூறினாராம்.. பட்டாசு நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவரை கொண்டு சென்று நாள் முழுவதும் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டு விடுவிச்சிருக்காங்க.. எப்படி இப்படி போலீசாருக்கு சரியாக தகவல் சொல்றாங்கனு மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ கவலையில் ஆழ்ந்துள்ளாராம்.. எதிர்க்கட்சியினரை கூட சமாளித்து விடலாம்.. உட்கட்சி எதிரிகளிடம் தான் கவனமாக இருக்கணும் போல என ரொம்பவே புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஸ்டேஷன்ல இன்ஸ் இருந்தாலே ரவுண்ட்ஸ் போறதா காக்கிகள் ஓட்டம் பிடிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் கிணற்றின் பெயரை கொண்ட ஸ்டேசன் இன்ஸ் ஒருவர் சிவில் பிரச்னையில் தலையிட்டு ஜோராக கல்லா கட்டி வருகிறாராம்.. குறிப்பாக இலைக்கட்சி பிரமுகர் ஒருவரோடு கைகோர்த்துக்கொண்டு தன்னுடைய ஸ்டேசன் லிமிட்டில் எங்கெல்லாம் வில்லங்கமான விவசாய நிலம், இடப்பிரச்னை இருக்கு என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு, தேவையில்லாம அதில் மூக்கை நுழைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து கரன்சியை கறப்பதில் இன்ஸ் கில்லாடியாம்.. சமீபத்தில் இலைக்கட்சி பிரமுகர் ஒருவருக்காக சிவில் பிரச்னையில் தலையிட்ட இன்ஸ் மாற்றுத்திறனாளியை ஸ்டேசனுக்கு வரவைத்து செல்போன்களை எல்லாம் பறிச்சி மிரட்டினாராம்.. ஆனா இன்ஸின் மிரட்டலுக்கு மாற்றுத்திறனாளி அடி பணியாததால் பெண்கள் உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தாராம்.. லட்சணக்கணக்கில் கல்லா கட்டினாலும் தனக்கு கீழ் வேலை செய்யற ஒருத்தருக்கும் ஒத்த பைசா இன்ஸ் கொடுப்பதில்லையாம்.. எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை பத்தி காது வலிக்கும் அளவுக்கு இன்ஸ் மணிக்கணக்கில் கிளாஸ் எடுப்பதோடு இல்லாம என்னை பார்த்து நேர்மையை கற்றுக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வேற செய்வாராம்.. இதனால் ஸ்டேசனில் இன்ஸ் இருந்தாலே போலீஸ்காரங்க ரவுண்ட்ஸ் போகிறோம் என்று கூறி ஓட்டுமெடுத்து விடுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிதாக கட்சி தொடங்கிய மைத்துனரை இருக்க இடம் தெரியாமல் ஆக்குவதுதான் மாமாவோட ஆசையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார் லாட்டரி அதிபர் மகன்.. வரும் சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளை குறி வைத்து வேட்பாளர்களை களம் இறக்க உள்ளாராம்.. இதற்காக பெரிய அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்து சமூக சேவைகள் உள்பட அனைத்து பணிகளையும் செய்து வருகிறாராம்.. புதுச்சேரியில் எங்கோ இவர் வளர்ந்துவிட போகிறார் என்ற எரிச்சல் அவரது மைத்துனரான விஜயமான நடிகர் கட்சியின் பிரமுகரானவருக்கு இருக்கிறதாம்.. இதனை முறியடிக்க புஸ்ஸியை அழைத்துக்கொண்டு நான்கு முறை புல்லட்சாமியை பார்த்து நடிகரின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினாராம்.. புல்லட்சாமியுடன் தவெக கூட்டணி அமைத்து தனது மைத்துனரை இருக்க இடம் தெரியாமல், அரசியலில் இருந்து ஓரம் கட்ட செய்ய வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.. ஆனால் புல்லட்சாமி, நடிகர் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆசைப்படவில்லையாம்.. இதனை அறிந்த லாட்டரி அதிபர் மகன், தனது கட்சியை பிரமாண்டமாக தொடங்கி தொடர்ந்து மக்கள் சேவையை செய்து காட்ட வேண்டும். மைத்துனரின் முகத்தில் கரியை பூச வேண்டும் என வெறியோடு தேர்தல் பணியாற்றி வருகிறாராம்.. மேலும் மைத்துனரின் சுயரூபத்தை, அடிக்கடி பத்திரிகை மூலம் தோலை உரித்து காட்டியும் வருகிறாராம்.. மாமா-மச்சான் சண்டை புதுச்சேரியில் தற்போது கடுமையாக எதிரொலிக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


