ஆர்டிஐ கேள்வியில் அதிர்ச்சி தகவல்; தமிழ்நாடு முழுவதும் 702 ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: பயணிகள் பாதுகாப்பில் அக்கறையில்லை என குற்றச்சாட்டு
நெல்லை: தமிழ்நாடு முழுவதும் 702 ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆர்டிஐ கேள்விகளில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பயணிகள் பாதுகாப்பில் அக்கறை காட்டுகிறோம் என ரயில்வே துறை தெரிவித்து வரும் நிலையில், அதிகரித்து வரும் காலி பணியிடங்களால் கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகத்தில் சமீபகாலமாக ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் பணியில் உள்ள ரயில்வே ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்களில் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருவதாக கூறி ஏற்கனவே தெற்கு ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 4 ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் காலி பணியிடங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரிகள், ‘சென்னை ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுனர் பணியிடங்கள் 2047, நடப்பு பணியிடங்கள் 1586, காலி பணியிடங்கள் 461’ என தெரிவித்துள்ளனர். திருச்சி ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுனர் பணியிடங்கள் 447, நடப்பு பணியிடங்கள் 372, காலி பணியிடங்கள் 75 எனவும், மதுரை ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுனர் பணியிடங்கள் 491, நடப்பு பணியிடங்கள் 411, காலி பணியிடங்கள் 80 எனவும், சேலம் ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுனர் பணியிடங்கள் 642, நடப்பு பணியிடங்கள் 556, காலி பணியிடங்கள் 86 எனவும் பதில் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 627 லோகோ பைலட்டுகள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 2925 பேர் மட்டும் பணியாற்றுகின்றனர். அதாவது 702 பேர் பற்றாக்குறை உள்ளது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாமலும், ஏற்கனவே உள்ள ரயில் ஓட்டுநர்கள் மன அழுத்தத்துடன் பணிபுரிவதாலும் பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரயில் ஓட்டுநர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘தமிழ்நாடு முழுவதும் 702 ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை என்ற தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக பணியில் இருப்பவர்கள் கடும் மன அழுத்தத்தோடு, அதிக பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். இது ரயில் பயணிகளின் பாதுகாப்பில் நேரடி தொடர்புடையது.
மேலும் மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயில் தேவை மிக அதிகமாக உள்ளது. ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ரயில் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள 702 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


