புதுடெல்லி: முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக வெற்றியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். அக்னி பிரைம் ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இது மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்த ஏவுகணை முதல் முறையாக ரயில் மீதான மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் இந்த சோதனையை செய்து வெற்றி பெற்றுள்ளனர். ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டா நாடாக இந்தியா மாறியுள்ளது. இதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தனத எக்ஸ் தள பதிவில், ‘‘ரயிலில் உள்ள மொபைல் லாஞ்சரில் இருந்து அக்னி ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. இது, 2000 கிமீ வரை சென்று தாக்கும் திறன் உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில் மீதான மொபைல் லாஞ்சரில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை சோதனை சிறப்பாக செய்யப்பட்டது. இந்த வெற்றிகரமான சோதனை இந்தியாவை ரயில் மீதான மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவுகணைகள் ஏவும் திறன் கொண்ட நாடாக மாற்றி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.