Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரயில் பயணிகளின் ஆதாரை கவனமாக சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு!!

டெல்லி : ரயில் பயணிகளின் ஆதாரை கவனமாக சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இதனிடையே தட்கல் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களின் குறுக்கீடு அதிகரிப்பதாக வந்த புகாரையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2.5 கோடி போலி கணக்குகளை அண்மையில் கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது.மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் மூலம் ஓடிபி முறை கொண்டு வரப்படும் என அண்மையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில், ரயில் பயணிகளின் ஆதாரை கவனமாக சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் சரிபார்ப்பு தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் அளித்த உத்தரவில், "பயணிகளின் ஆதார் அட்டையை எம்ஆதார் என்னும் செயலியை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும். பயணிகளின் அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம், போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.