சென்னை: ரயில் விபத்துகள் எதிரொலியாக, பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு கவரப்பேட்டையில் நடந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய விரிவான விசாரணையில், இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட சதி காரணமாக நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பணியாளர்களின் பங்கு இருக்கலாம் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று கூறிய ஆணையர், இதுபோன்ற சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து உள்ளீடுகளைச் சேகரிக்கும் முறையை ரயில்வேயின் உளவுத்துறைப் பிரிவு உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
மேலும், விபத்து குறித்த அறிக்கையில், முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் ஒப்பந்தப் பணியாளர்களின் பங்கு மற்றும் அவர்களுக்கு அந்த துறைகளில் திறன் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதை குறுகிய காலத்தில் குறைத்து, நீண்ட காலத்தில் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ரயில்வே வாரியம், அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு உளவுத்துறையானது, ரயில்வே பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிரமாக தகவல் சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல்களை கண்டறியவும், ரயில்வே உள்கட்டமைப்பை பாதுகாக்கவும், சூழ்நிலை அடிப்படையிலான பயிற்சி, மாதிரி பயிற்சிகள் மற்றும் சிறப்பு குழுக்களை அனுப்புதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது கவரப்பட்டை விபத்து போன்று சதிக்கு உட்படுத்தப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும் முயற்சித்து வருகிறது.