Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2023ம் ஆண்டு நடந்த ரயில் விபத்துகளில் 21,803 பேர் உயிரிழப்பு: கடந்த 10 ஆண்டுகளில் 2.6 லட்சம் பேர் பலி

சென்னை: 2023ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளில் 21,803 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 24,678 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இது 2022ம் ஆண்டை விட 6.7 % அதிகம். இந்த விபத்துகளில் 3,014 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2014 முதல் 2023 வரை நடந்த ரயில் விபத்துகளில் சுமார் 2.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2014ல் 25,006 பேர் உயிரிழந்தனர். 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்தில் உயிரிழப்புகள் 11,968 ஆக குறைந்திருந்தன. ஆனால் அதன் பிறகு மீண்டும் படிப்படியாக அதிகரித்து 2021ல் 16,431 ஆகவும், 2022ல் 20,792 ஆகவும், 2023ல் 21,803 ஆகவும் உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் 5,559 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இது நாட்டில் மிக அதிகம். மொத்த விபத்துகளில் 22.5 %. உத்தரபிரதேசம் 3,212 விபத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது மொத்த விபத்துகளில் 13 %. மேற்கு வங்கமும் மத்தியப் பிரதேசமும் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களாக உள்ளன. ரயிலில் இருந்து தவறி விழுதல் மற்றும் தண்டவாளத்தில் மோதுதல் போன்ற சம்பவங்கள் மொத்த விபத்துகளில் 74.9 % ஆக உள்ளது. 18,480 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மட்டும் 15,878 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த உயிரிழப்புகளில் 72.8 %. ரயில் பயணிகள் கவனக்குறைவாக இருப்பதும், நெரிசலான ரயில்களில் பயணிப்பதும், கதவுகளில் தொங்கி பயணிப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

அதே போல் ரயில் கடக்கும் இடங்களில் நடக்கும் விபத்துகளில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2,483 விபத்துகளில் 1,025 அங்கு நடந்துள்ளன. இது 41.3 %. இதில் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 805, மத்தியப் பிரதேசத்தில் 375 விபத்துகளிலும் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பாதுகாப்பு வசதிகள் இல்லாத ரயில் கடக்கும் இடங்கள், சரியான சிக்னல் அமைப்புகள் இல்லாதது, மக்களின் கவனக்குறைவு போன்றவை காரணங்களாகும். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 11 அன்று கவரைப்பேட்டை அருகே பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதில் 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டிலும் பல ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, 56 விபத்துகள் ரயில் ஓட்டுநரின் தவறால் நிகழ்ந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. 43 விபத்துகள் மோசமான தண்டவாள வடிவமைப்பு, தண்டவாளப் பிழைகள், பாலம் அல்லது சுரங்கப் பாதை இடிந்து விழுதல் போன்ற குறைபாடுகளால் ஏற்பட்டுள்ளன. நாசவேலை, சிக்னல் இயக்குநர்களின் தவறு, இயந்திரக் கோளாறு போன்றவையும் சில விபத்துகளுக்கு காரணங்களாக இருந்துள்ளன.

பெரும்பாலான விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் நடக்கின்றன. மாலை நேரத்தில் 3,771 விபத்துகளும், காலை நேரத்தில் 3,693 விபத்துகளும் நடந்துள்ளன. இந்த நேரங்களில் பயணிகள் அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகமாகின்றன. அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் போன்றோர் இந்த நேரங்களில் அதிகமாக பயணிப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

ரயில் பாதுகாப்பை மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இயந்திரக் குறைபாடுகளை சரி செய்யவும், பழைய தண்டவாளங்களை மாற்றவும், ரயில் கடக்கும் இடங்களில் சரியான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சிக்னல் அமைப்புகளை நவீனமயமாக்கவும் வேண்டும். ரயிலில் இருந்து இறங்கும்போதும் ஏறும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ரயில் கடக்கும் இடங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என தேசிய குற்றப் பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது. ரயில் போக்குவரத்து முறையின் பலவீனங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உடனடி சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.