ரேஷன் பொருட்கள் வாங்கி திரும்பிய போது சோகம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு
*10 பேர் படுகாயம்
சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குக்கிராமம் என்பதால் 3 கிமீ தூரம் உள்ள சின்னபொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
நேற்று கூவர்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள், 2 ஆண்கள் என 13 பேர் ரேஷன் பொருட்களை வாங்கி விட்டு, ஒரு டிராக்டரில் ஏறி அனைவரும் வந்துள்ளனர். டிராக்டரை சின்னபொதிகுளத்தை சேர்ந்த கண்ணன் (45) ஓட்டி வந்துள்ளார்.
சின்னபொதிகுளம் அருகே உள்ள கண்மாய் கரையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் முதுகுளத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கூவர்கூட்டத்தை சேர்ந்த பொன்னம்மாள் (62), ராக்கி (60), முனியம்மாள் (65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 10 பேர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து இளஞ்சம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனை முன்பு சாலைமறியல் ஈடுபட்டனர்.
முதல்வர் நிவாரணம்
விபத்து குறித்து தகலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.