சென்னை: போக்குவரத்து விதிமீறல் தொடர்பான லிங்க் அனுப்பி மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. E-challan.apk என்று வரும் லிங்க்-ஐ யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் என லிங்க் அனுப்பி செல்போன், வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்படுகிறது. மோசடி லிங்க் அனுப்பி பணமும் பறிக்கப்படுவதால் கவனமாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நீங்கள் பைக் அல்லது கார் உரிமையாளர் எனில், உங்களுக்கு "பரிவாஹன் இ-சலான்" என்கிற பெயரில் மெசேஜ் வரும். பெரும்பாலும் இது வாட்ஸ்அப் வழியாகத்தான் வரும். நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டதாகவும், அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். வழக்கமாக போக்குவரத்து காவல்துறை அனுப்பும் மெசேஜ்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் இபரிவாஹன்' (mParivahan) ஆப் லிங்க் இருக்கும்.
இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்தால், உடனடியாக பிளே ஸ்டோருக்கு போகும். பின்னர் இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து, அபராத தொகையை கட்டலாம். ஆனால், போலியான மெசேஜில், APK அப்ளிகேஷனின் லிங்க் இருக்கும். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்காது.
க்ரோம் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டி இருக்கும். அதை நீங்கள் உண்மை என நினைத்து இன்ஸ்டால் செய்தால் உங்கள் மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., தொடர்பு எண்கள் மற்றும் வங்கி விவரங்களை அணுக அனுமதி கேட்கும்.
எல்லாவற்றிற்கும் ஓகே கொடுத்தால், ஓ.டி.பி.களைக் அனுப்பி, மோசடியான பணப் பரிமாற்றங்களைச் செய்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். வங்கி கணக்கில் பணம் காலியான பின்னர்தான், தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிந்துக்கொள்வார்கள்.
எனவே போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை, அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அரசு செயலி மூலம் மட்டுமே கட்ட வேண்டும் சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. APK அப்ளிகேஷன்களை ஒருபோதும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேவையற்ற தொடர்புகளையோ அல்லது போலியான வலைத்தளங்களையோ நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.