பைக்கை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் டிராபிக் போலீஸ் ஏட்டு முகத்தில் பிளேடால் கிழிப்பு: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் கைது
விழுப்புரம்: போதையில் பைக் ஓட்டியதால் பைக்கை பறிமுதல் செய்த டிராபிக் போலீஸ் ஏட்டுவை பிளேடால் முகம், கையை கிழித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(30). நேற்று முன்தினம் இரவு பைக்கில் விழுப்புரத்திற்கு வந்துள்ளார். அப்போது போதையில் சென்ற அவரை காந்தி சிலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சண்முகம், ஏட்டு இளஞ்செழியன் ஆகியோர் மடக்கி பிடித்தனர். போதையில் வாகனம் ஓட்டியதால் அஜித்குமார் மீது வழக்கு பதிந்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அகங்கிருந்து சென்ற அஜித்குமார் சிறிது நேரம் கழித்து, ரயில்நிலையம் அருகே போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு இளஞ்செழியன் முகம், கையில் பிளேடால் கிழித்து விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஏட்டு இளஞ்செழியனை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர காவல்நிலைய போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிந்து, விழுப்புரம் சித்தேரிகரையில் மறைந்து இருந்து அஜித்குமாரை கைது செய்தனர்.