காஞ்சிபுரத்தில் ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவுபடி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலை மையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத வாகனம், ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாய் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் விதிமீறியதாக 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 22 லட்சத்து 7,735 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிமீறிய வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம், பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த சோதனை தொடர்ந்து நடக்கும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.