பைக் மீது மோதியதற்கு நஷ்டஈடு கேட்ட வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயன்ற போக்குவரத்து எஸ்ஐ சஸ்பெண்ட்: பேனட்டில் தொங்கிய வீடியோ வைரல்
நெல்லை: நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி அசோக்குமார் (40). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் பஸ் திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பைக் பஸ்சின் பின் பகுதியில் லேசாக மோதியது. அதேசமயம் அவ்வழியாக வந்த டவுன் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ காந்திராஜனின் கார், பைக்கின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பைக் சேதமானதால் அசோக்குமார், சிறப்பு எஸ்ஐ காந்திராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பைக் சேதாரத்தை சரி செய்ய வேண்டுமென கேட்டார். ஆனால், எஸ்எஸ்ஐ காரை எடுத்துச் செல்ல முயன்றார்.
இதனால் அசோக்குமார் முன்புறமாக நின்று காரை மறித்தார். தொடர்ந்து அவர் காரை இயக்கியதால், அசோக்குமார் கார் பேனட்டின் மீது படுத்துக் கொண்டார். ஆனாலும் காரை நிறுத்தாமல் எஸ்எஸ்ஐ சிறிது தூரம் அவரை கார் பேனட்டில் தொங்கவிட்டவாறு ஓட்டிச் சென்றார். காரை கெட்டியாக பிடித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அசோக்குமார் கத்தினார். சிறிது தூரம் சென்றதும் எஸ்எஸ்ஐ காரை நிறுத்தினார். இதை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணியின் உத்தரவின் பேரில் டவுன் போக்குவரத்து போலீஸ் சிறப்பு எஸ்ஐ காந்திராஜன் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் அசோக்குமார் புகாரின்படி நெல்லை டவுன் போலீசார் கொலை முயற்சி, பொதுமக்களை பயமுறுத்தல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் அறிக்கை அளித்ததையடுத்து, கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின்படி சிறப்பு எஸ்ஐ காந்திராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.