Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி அசத்தல் நடவடிக்கை: சென்னையில் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்

* ஒரே நேரத்தில் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தலாம், செப்டம்பர் முதல் அறிமுகம்

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. அதற்கு சென்னையும் விதிவிலக்கு அல்ல. போக்குவரத்து நெரிசலுக்கு காரணத்தை கண்டறிந்து அதனை ஆக்கப்பூர்வமாக சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை என்பது ஒரு பிரச்னை என்றால்... சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது மற்றொரு பிரச்னை... இந்த இரண்டிற்கும் ஒரே திட்டம் மூலம் தீர்வுகாண முயல்கிறது சென்னை மாநகராட்சி.

அதுதான் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம். ஏற்கனவே மெரினா கடற்கரை, தி.நகர் போன்ற பகுதிகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரம் இன்று உலகின் முன்னணி நகரங்களுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கத் தயாராகிறது. செப்டம்பர் 2025 முதல் அண்ணா நகரில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம், நம் நகரத்தின் நவீன மாற்றத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கப்போகிறது.

இதை மேம்படுத்தி, சென்னை மாநகராட்சியும், போக்குவரத்து ஆணையமும் இணைந்து ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கொண்டுவர உள்ளன. முதற்கட்டமாக அண்ணா நகரில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. அங்கு 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2வது, 3வது, 6வது அவென்யூ சாலைகள் தயாராகி வருகின்றன. இந்த சாலைகளில் 2 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்கள், 5 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்காக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் ஆயிரத்திற்கும் அதிகமான கேமராக்களும் பொருத்தப்படுகின்றன. அண்ணாநகரில் இந்த திட்டம் எந்தளவிற்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கைகொடுக்கிறது என்பதை பொறுத்து, மாநகரின் மற்ற பகுதிகளுக்கு இது விரிவுபடுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் பார்க்கிங் என்பது பார்க்கிங் இடங்களைக் கண்டறிந்து, நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப தீர்வாகும். இது சென்சார்கள், கேமராக்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பார்க்கிங் இடங்களைப் பற்றிய நிகழ்நேர தகவல்களை நமக்கு வழங்குகிறது.

இதன் மூலம், ஓட்டுநர்கள் பார்க்கிங் இடத்தை எளிதில் கண்டறியவும், பார்க்கிங் ஆபரேட்டர்கள் தங்கள் உடைமைகள சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறது. பார்க்கிங் இடங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், பார்க்கிங் எந்தெந்த இடங்களில் இருக்கிறது என்று உடனுக்குடனே நமக்கும் தெரிவிக்கின்றன.

மேலும் ஓட்டுநர்கள் தங்கள் மொபைல் செயலிகள் மூலம் அருகிலுள்ள பார்க்கிங் இடங்களை கண்டறியவும், இடங்களை முன்பதிவு செய்யவும் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் உதவுகின்றன. மேலும் சென்னைக்குள் அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனங்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பார்க்கிங் செயலியைப் பயன்படுத்தி, பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம்.

கட்டணம் செலுத்தாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் நபர்களின் வாகனங்களுக்கு பூட்டு போடப்படும். மேலும் 6 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தால் வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பார்க்கிங் இடங்களை ஒழுங்குபடுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் அண்ணா நகர் பகுதியில், பார்க்கிங் இடங்களின் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மூலம், பார்க்கிங் இடங்களை முறைப்படுத்தவும், கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முடியும். ஓட்டுநர்கள் பார்க்கிங் இடத்தை தேடும் நேரத்தை குறைக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட் பார்க்கிங் இடங்களை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம், அது நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. பார்க்கிங் இடத்தை தேடுவதால் ஏற்படும் எரிபொருள் செலவுகளை மிச்சப்படுத்துகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறியதாவது: சென்னை மாநகரம் முழுவதும் ஏற்கனவே வாகன பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அண்ணாநகர் மட்டுமல்லாமல், சென்னை முழுவதும் முக்கியமான பகுதிகளை கண்டறிந்து வட்டார ரீதியாக பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.

இது பைலட் முறையில் அமைக்கப்பட்டு பின்னர், சென்னை முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். பார்க்கிங் வசதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்படும். தமிழ்நாடு முதல்வரின் ‘டிஜிட்டல் தமிழ்நாடு’ பார்வையின் கீழ் பார்க்கிங் வசதிகள் டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்பட உள்ளது. சென்னையில் முறையாக பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி, மக்களின் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

* இந்தியாவிலேயே முதல்முறை

அண்ணாநகரில் அமைய உள்ள ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் மூலம் இந்தியாவின் முதல் முழுமையான ஸ்மார்ட் பார்க்கிங் நகரமாக சென்னை மாற உள்ளது. மெரினா கடற்கரை, தி.நகர் வெற்றிக்கு பிறகு, அண்ணா நகரில் இந்த மாபெரும் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. வெற்றிக்குப் பிறகு முழு சென்னை நகரமும் இந்த வசதியைப் பெறும். தமிழ்நாடு அரசின் இந்த அற்புதமான முயற்சி, சென்னையை உலகின் மிகச் சிறந்த ஸ்மார்ட் நகரங்களில் ஒன்றாக மாற்றும்.

* உலக நகரங்களுக்கு இணையாக...

சிங்கப்பூர், டோக்கியோ, லண்டன் போன்ற உலகின் அதிநவீன நகரங்களில் மட்டுமே காணப்படும் ஸ்மார்ட் பார்க்கிங் தொழில்நுட்பம் இனி நம் சென்னையிலும். இது தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வையின் சிறந்த உதாரணம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடி நகரம்

* இந்த புரட்சிகர திட்டம் மூலம் 60% போக்குவரத்து நெரிசல் குறைப்பு

* 40% எரிபொருள் சேமிப்பு

* 50% காற்று மாசு குறைப்பு

* பசுமை சென்னையின் நோக்கம் நனவாகும்

* ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனங்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஸ்மார்ட் பார்க்கிங் செயலியைப் பயன்படுத்தி, பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம்.

* கட்டணம் செலுத்தாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் நபர்களின் வாகனங்களுக்கு பூட்டு போடப்படும்.

* 6 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தால் வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

என்னென்ன நன்மைகள்

* தினமும் 30 நிமிடங்கள் மிச்சம்

* மன அழுத்தம் குறைப்பு, பார்க்கிங் கவலையே இல்லை

* எரிபொருள் செலவு 30% குறைப்பு

* குறைந்த மாசு, சுத்தமான காற்று