தொடர்கதையாகும் போக்குவரத்து நெரிசல் கடலூர் பாரதி சாலையில் நடை மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கடலூர் : கடலூர் பாரதி சாலையில் காட்சி பொருளாக உள்ள நடை மேம்பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் பாரதி சாலையில் புதுநகர் காவல் நிலையம் எதிரே தனியார் பள்ளி மாணவிகள் காலை, மாலை நேரங்களில் பிரதான சாலையான பாரதி சாலையை கடந்து பள்ளிக்கு சென்று வரும் நிலை இருந்தது.
அவ்வாறு சாலையை கடக்க முயலும்போது, மாணவிகள் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கடந்த 2018-19ம் ஆண்டு ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்காக சாலை இருபுறமும் ராட்சத இரும்பு தூண்கள் நிறுத்தி, அதன் மீது சுமார் 17 டன் இரும்பினால் நடைபாலம் வடிவமைக்கப்பட்டது.
மாணவிகள், பொதுமக்கள் எளிதில் ஏறி செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவிகள் சிரமமின்றி, எந்த வித ஆபத்துமின்றி எளிதாக சாலையை கடக்க வழிகாணப்பட்டது. ஆனால் இந்த நடை மேம்பாலத்தை மாணவிகள் பயன்படுத்தாமல் சாலையை கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் பள்ளி நேரத்தில் மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை தடை செய்து மாணவிகளை சாலையை கடக்க உதவுகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது தினந்தோறும் வாடிக்கையாக நடக்கிறது. இதனால் காலை நேரத்தில் அலுவலகத்திற்க்கு செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சரியான நேரத்திற்கு தங்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக பயன்படுத்துவதால், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே நிறைவேறாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்த நடை மேம்பாலத்தை மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.