Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை வில் வடிவில் ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம்

*கோட்டை பாலப்பணியும் விறுவிறுப்பு

*2026 ஏப்ரலில் திறக்க பணிகள் தீவிரம்

திருச்சி : தமிழகத்தின் இதயப்பகுதியாக திருச்சி விளங்குவதால் சென்னை, கோவை, திருநெல்வேலி, வேலூர், கன்னியாக்குமரி, நாகை என 8 திசைகளிலும் இருந்து வந்து செல்லும் வாகனங்கள், ரெயில்கள் தமிழகத்தின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சியை கடந்தே செல்ல வேண்டும். இதனால் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எப்போதும் பிஷியாகவே இருக்கும். திருச்சியில் இருந்து கரூர், சென்னை, நாகை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மார்க்கங்களில் ரயில் பாதை உள்ளது.

இதனால் திருச்சி மாநகர் முழுவதும் ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. பாலக்கரை, தென்னூர், கல்லுக்குழி, கோட்டை, அரியமங்கலம், சர்கார்பாளையம் ஆகிய பகுதிகளில் இதற்கான மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இருப்பினும் திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பாலக்கரை, தென்னூர், கோட்டை, ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள் மாநகரத்தின் பிரதான போக்குவரத்தை தாங்கி பிடித்து நிற்கிறது. இதில் கோட்டை, ஜங்ஷன் ஆகிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலமானது கடந்த 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. 1971ம் ஆண்டு இப்பாலம் பலப்படுத்தப்பட்டது. இருப்பினும் 157 வருட பழமையான இந்த பாலம் குறுகலான அகலம் கொண்டிருந்ததால், திருச்சி போக்குவரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. இதன் காரணமாக விசாலமான பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பழைய பாலமானது கடந்த மே மாதம் இடிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய விசாலமான பாலத்திற்கான கட்டுமான பணி தொடங்கியது. மாநகராட்சி தரப்பில் இரண்டு புறமும் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிக்காக இருமருங்கிலும் கான்கிரிட் சுவர்கள் கட்டப்பட்டு, மண் நிரப்பி சமப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.

ரயில்ேவ துறை சார்பில் தண்டவாளத்தின் மேல் கட்டப்பட வேண்டிய ைமயத்தில் அமையவிருக்கும் கான்கிரீட் பாலப்பணியில் தற்போது பூர்வாங்க பணிகள் மட்டுமே நடைபெற்று உள்ளது. மையப்பகுதி கட்டுமானத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டுமான பணி முடிவுற்ற பின்னரே இரு பக்கமும் உள்ள மற்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் தொடங்கும். மாரிஸ் ரயில்வே மேம்பாலம் வழக்கமான கிர்டர் பாலம் முறையையே ரயில்வே பயன்படுத்த உள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் விரிவாக்க கட்டுமான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரயில்வே மேம்பாலங்கள் கட்டம் I வழியாக திருச்சி நகரத்திற்குள் நுழையும்.

தற்போது கட்டுமான பணி நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பாலமானது நகரத்திலிருந்து வெளியேறும் வாகனங்கள் மன்னார்புரம், மற்றும் சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு செல்ல பயன்படும். இந்த பாலத்தில் மூன்று வழிச்சாலைகளும், நடைபாதையும் இருக்கும்.

இப்பாலத்தை கட்டுவதற்கு தென்னக ரயில்வே ஒரு புதிய முறையை தேர்ந்தெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள மேம்பாலத்தில் சாதாரண கிர்டர் முறை பயன்படுத்தி கட்டப்பட்டது. தற்போது 58 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட உள்ள மற்றொரு ஜங்ஷன் மேம்பாலம் பாலம் வில் வடிவ பாலம்(bow string firder bridge) மாதிரியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

புதிய கொள்ளிடம் ஆற்று பாலத்தை போலவே (நேப்பியர்), ஜங்ஷன் மேம்பாலமும் இருக்கும். சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 டிசம்பரில் இதற்கான பணிகள் முடிவடையும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பரில் நிறுவப்பட வேண்டிய வில் வடிவ கம்பி வடங்கள்(bow-string girder components) இன்னும் பொருத்தப்படவில்லை. எனவே மேலும் கால தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

இந்த இரண்டு பாலங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தில்லைநகர், உறையூர் பகுதியில் இருந்து மெயின்கார்டுகேட் பகுதிகள் செல்ல வேண்டும் என்றால் தென்னூர் அல்லது சத்திரம் பேருந்து நிலையம் வழியாக சுற்றி சென்று வருகின்றனர். ஜங்ஷன் மேம்பாலத்தில் உள்ள பாலம் இருவழிச்சாலையாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதால் விபத்து அபாயம் அங்கு நிலவி வருகிறது.

திருச்சியின் பிரதான போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த 2 பாலங்களின் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கான காரணம் ஒப்புதல், அனுமதி பெறுவதற்கான நடைமுறை சிக்கல்களே என்று கூறப்படுகிறது.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு முக்கிய காரணம் ஒப்புதல் அனுமதிக்கான நடைமுறைகள் என்று கூறப்பட்டாலும், கான்கிரீட் தூண்களின் பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது, கோட்டை ரயில் நிலைய மேம்பாலத்தில் மையப்பகுதிகளை ரயில்வே நிர்வாகம் 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்து தருவதாக கூறி உள்ளது. அதன் பின்னர் மாநகராட்சி நிர்வாகம் தனது பணிகளை முழுவீச்சில் தொடங்கி 2026 ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல ஜங்ஷன் மேம்பால பணியானது 2026 ஜனவரி மாதத்திற்குள் ரயில்வே நிர்வாகம் நிறைவு செய்து தருவதாக கூறி உள்ளது. அதன் பின்னர் மாநில நெடுஞ்சாலை துறையினர் இருபுறமும் தங்களின் பணிகளை தொடங்கி சாலை அமைத்து 2026 மே மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டதன் காரணமாக திருச்சியில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேகமெடுத்துள்ள பணிகளால் 2026ம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் இந்த 2 பாலங்களும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பயன்பாட்டிற்கு வந்தால், திருச்சி மாநகரில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் நிம்மதி பயணம் மேற்கொள்வர்.