Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகத்துவம் மிகுந்த பாரம்பரிய உணவுகள்!

முன்பெல்லாம் கடைகளில் ஷாம்பு, தேங்காய் எண்ணெய் போன்றவைதான் சரம் சரமாய் தொங்குவதைப் பார்க்கமுடியும். ஆனால், இப்போது உணவுப் பொருட்கள் கடைகளில் தொங்கும் பொருட்களில் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயில் இருந்து கூட தின்பண்டங்கள் சிறு சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் தொங்குகின்றன. சிறுவர்களின் ஸ்நாக்ஸ் ஆசை இப்போது எளிதாக நிறைவேறி விடுகிறது. ஆனால் அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வயிற்றை கழிவுகளின் இருப்பிடமாக மாற்றிக் கொள்கிறார்கள். பெரியவர்கள், அவசர உணவுத் தேவைக்கு இதுபோல் எதையாவது வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள். என்ன இவர்கள் கொஞ்சம் சில வித்தியாசமான ரெஸ்டாரென்ட்களை நாடுகிறார்கள்.அலுவலகம் போகும் சில ஆண்கள் கையில் சாப்பாட்டுப் பொட்டலம் கொண்டு போவதை விரும்புவதில்லை. பலர் வார இறுதிகளில் உணவுவிடுதிகளை நாடுவது சாதாரணமாகிவிட்டது.

விதவிதமான சாப்பாடு சாப்பிடுவதற்காக வெளியூர் போகிறார்கள். உணவுத் திருவிழாக்கள் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் பல்வேறு உணவுகள் சங்கமித்தன. இப்போது தெருக்களிலும், சாதாரணத் திருமண மண்டபங்களிலும் இந்த நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அந்நிய வகை உணவுகள் சுலபமாக மேசைக்கு வந்துவிடும்போது யாருக்கும் சாப்பிடுவதற்கு ஆசை ஏற்படத்தான் செய்யும். உணவும், கேளிக்கையும்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது பலருக்கு.துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்பு களையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவைத் தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்ச்சத்து, ரசாயனக் கலவைகள், கொழுப்பு வகைகள் என்று பல தீமை தரும் பொருட்கள் உணவில் கலந்துவிட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுக்கோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுகின்றன.

இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.தொழிலுக்கு தகுந்தபடியும், வருமானம், பருவகாலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளைத் தமிழர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். வெயில் காலத்தில் தண்ணீர், கஞ்சி, குளிர் காலத்தில் சுடுசோறு, கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்தில் இருந்தது. தங்களுக்குக் கிடைக்கும் இளநீர், நுங்கு, மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சாப்பிட்டு வந்தனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவைச் சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை வேகமாக வளர்ந்தது. சமையல் கலை இன்று ஒரு வகைப் படிப்பாகவும் வளர்ந்துவிட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக்கூடங்களில் கூட இவ்வகை படிப்பு படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

பரோட்டா, பிரியாணி, குஸ்கா, ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்ற உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளைத் தேடுகிறான் இன்றைய தமிழன். ஆனால் இப்போது நமது பாரம் பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டிவேர், வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள் போன்றவற்றையும், மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, கரிசாலங்கண்ணிக் கீரை, புதினா, மல்லி, கீழாநெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளையும் சாதாரண உணவில் சேர்க்கப்படும்பொழுது அவை அனைத்தும் நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படும். இன்று மருந்தைத் தனியாக தேடி நிறைய செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது.சந்தோசத்திற்கு வெளியே சென்ற மனிதன், இன்று நோயைக் குணப்படுத்த ஆலாய் பறக்கிறான். புதுமை வேகத்தைத் தரும். பழமை ஆரோக்கியத்தைத் தரும் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். நமது பாரம்பரிய உணவே நமது அடையாளம் என்பதை உணர்ந்து அவற்றைச் சாப்பிடுவதே அனைத்திற்கும் தீர்வு தரும்.