கொடைக்கானல்: கொடைக்கானலில் சாக்லெட் கடைக்காரரை சரமாரியாக தாக்கி 7 சவரன் நகை பறித்த தவெக பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் சாக்லெட் கடை வைத்திருப்பவர் ராஜா. கடந்த 19ம் தேதி இவரது கடைக்கு பழநியை சேர்ந்த வியாபாரிகள் சரக்கு வாகனத்தில் தக்காளி, வெங்காயம் மொத்த விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது கடையில் இருந்த பணியாளர்கள் சரக்கு வாகனத்தில் இருந்த தக்காளி, வெங்காயத்தை வாங்குவதற்காக தரம் பிரித்துள்ளனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, தரம் பிரிக்க கூடாது, மொத்தமாக வாங்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் கடை பணியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கடைக்காரர் ராஜா தக்காளி, வெங்காயத்தை வாங்க மறுக்க, வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.
சிறிதுநேரம் கழித்து 3 சரக்கு வாகனங்களில் வியாபாரிகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் ராஜாவின் கடைக்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராஜா மற்றும் அவரது பணியாளர்களை வெளியே இழுத்து அடித்து உதைத்தனர். மேலும் கடைக்குள் இருந்த கண்ணாடி பெட்டிகள், சாக்லெட்கள், தராசு உள்ளிட்ட பொருட்களை நொறுக்கியதாகவும், ராஜா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ராஜா உள்பட 3 பேர் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்தி விசாரணை நடத்தினர். இதில் தாக்குதலில் ஈடுபட்டது பழநி அருகே பெரிச்சிபாளையத்தை சேர்ந்த பழனிக்குமார் (33), விக்னேஷ் (32) என்பது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். கைதான இருவரும் தவெக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.