புதுடெல்லி: இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறி வரும் டிரம்ப் விரைவில் சதம் அடிப்பார் என காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் இந்த கூற்றில் டிரம்ப் விரைவில் சதமடிப்பார் என காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “டிரம்ப் கொண்டு வந்த 20 அம்ச இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்துக்கு இருதரப்பும் ஒப்பு கொண்டதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டு செய்திகளை அனுப்பி உள்ளார். அத்துடன், காசாவில் இனப்படுகொலையை அரங்கேற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி, அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர் டிரம்ப், வியாழக்கிழமை பின்லாந்து அதிபர் அலெக்சாண்டருடனான சந்திப்பின்போதும், இந்தியா பாகிஸ்தான் போரை வர்த்தகம் என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி தடுத்ததாக கூறியுள்ளார். இதை சொல்வதில் விடாமுயற்சியுடன் இருக்கும் டிரம்ப், விரைவில் சதம் அடிப்பார்” என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
+
Advertisement