Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டிராக்டர்களுக்கு குறைப்பால் எந்த பலனும் இல்லை; ஜிஎஸ்டி வரி குறைப்பில் விவசாயம் புறக்கணிப்பு: டெல்டா விவசாயிகள் குமுறல்

திருச்சி: புதிய ஜிஎஸ்டி சீரமைப்பு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்கு வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரி அடுக்கிலும், இதர பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரி அடுக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள், காபி, நெய், வெண்ணெய், ஐஸ்கீரிம் போன்ற உணவு பொருட்கள், சோப்பு, ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, ஜவுளி போன்ற வீட்டு உபயோக பொருட்கள், மருந்து பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரி குறைப்பில் விவசாயத்தை ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: டிராக்டர்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்கள், வேளாண் உற்பத்தி பொருட்கள், இயந்திரங்கள், இடு பொருட்கள் ஆகியவை அதே 5 சதவீத வரியில் உள்ளன. இவற்றுக்கு முழு வரி விலக்கு அளித்திருக்க வேண்டும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசிக்கு ஜிஎஸ்டி உள்ளது. இது நியாயமில்லை. விவசாயம் என்பது சேவை தொழில். அந்த விவசாயத்தை காக்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாகை தமிழ் செல்வன்: கார் போன்ற வாகனங்களை வாங்கக்கூடிய பணக்காரர்கள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குபவருக்கே ஜிஎஸ்டி வரி குறைப்பு பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜிஎஸ்டி விலக்கு அளிக்கவில்லை. உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜீரோ சதவீதம் அறிவிக்கும்போது இந்தியாவில் உணவு உற்பத்தியை மேலும் அதிகப்படுத்த விவசாயிகள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ஜீரோ சதவீதம் அறிவித்திருக்க வேண்டும்.

யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்களுக்கு ஏற்கனவே இருந்தது போல் 5 சதவீதம் வரி அப்படியே நீடிக்கிறது. அதேபோல் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக களைக்கொல்லியை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். களைக்கொல்லி பூச்சி மருந்துக்கு 18 சதவீதம் வரி பழைய முறையில் உள்ளது. இது ஏற்புடையது அல்ல. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தவைவர் அய்யாக்கண்ணு: டிராக்டர்களுக்கு வரி குறைத்திருக்கிறார்கள். இதன் மூலம் டிராக்டர் வைத்திருப்பவர்களுக்கு தான் பயன். விவசாயிகளுக்கு இல்லை. வரி குறைந்துள்ளது எனக்கூறி, டிராக்டர் கட்டணத்தை குறைக்க மாட்டார்கள். வேளாண் பொருட்களுக்கு ஜீரோ சதவீத வரி அளிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.