நச்சு நுரை ஆற்றில் பக்தர்கள் தத்தளிப்பு; மோடியின் ‘சத்’ பூஜைக்காக ‘போலி யமுனை’ உருவாக்கம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டால் டெல்லியில் பரபரப்பு
புதுடெல்லி: பிரதமர் மோடிக்காக சுத்திகரிக்கப்பட்ட நீரில் செயற்கை குளம் அமைத்துவிட்டு, பக்தர்களை நச்சு நுரை ஆற்றில் தவிக்கவிட்டதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் யமுனை நதி மாசுபாடு அடைவது பல ஆண்டுகளாக நீடித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாகும். ஒவ்வொரு ஆண்டும் சத் பூஜையின்போது, நதியில் மிதக்கும் நச்சு நுரைக்கு மத்தியில் பூர்வாஞ்சல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதும், இது தொடர்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே கடும் வார்த்தைப்போர் நடப்பதும் வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு சர்ச்சை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடியின் சத் பூஜை சடங்கிற்காக, சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு செயற்கை குளத்தை உருவாக்கி ‘போலி யமுனையை’ பாஜக தயார் செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘பிரதமர் மோடி வருகை தரும் வாசுதேவ் படித்துறை பகுதியில் மட்டும் செயற்கையாக தூய்மையான குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற படித்துறைகளில் சாதாரண பக்தர்கள் நச்சு நுரை கலந்த அபாயகரமான நீரில் தங்கள் சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். உத்தரப் பிரதேச விவசாயிகளுக்குச் செல்ல வேண்டிய ஹத்னிகுண்ட் அணை நீரையும் யமுனையை தூய்மையாகக் காட்ட பாஜக அரசு திசை திருப்பியுள்ளது’ என்று கடுமையாக சாடியுள்ளார். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா பதிலளிக்கையில், ‘பிரதமருக்காக மட்டுமின்றி, அனைத்து பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக்கரையை தூய்மைப்படுத்தும் நல்ல முயற்சியை ஆம் ஆத்மி கட்சி ஏன் எதிர்க்க வேண்டும் என்பது புரியவில்லை. கடந்த காலங்களில் யமுனை நதிக்கரையில் சத் பூஜை நடத்த தடை விதித்த ஆம் ஆத்மி, இப்போது இதை வைத்து அரசியல் செய்வது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது’ என்று கூறியுள்ளார். இதனிடையே, யமுனை நீர் தூய்மையாக இருப்பதை நிரூபிக்கும் வகையில், பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர், படித்துறையில் இருந்த நீரை எடுத்து அருந்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்வாஞ்சல் சமூகத்தினர் டெல்லியில் முக்கிய வாக்காளர்களாக இருப்பதால், இந்த மோதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
