Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள்

*கலெக்டர் தர்ப்பகராஜ் நேரடி ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் கீழ் நடைபெறும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று ஆய்வு நடத்தினார்.

அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள தீயணைப்பு அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்புப் பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், அதற்கான கருவிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் உள்ளதா என கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, வேங்கிக்கால் மின் நகர் பகுதியில் தொழில் முனைவோர் கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று செயல்படும் பல் மருத்துவமனையை பார்வையிட்டார். மேலும், அடி அண்ணாமலை பகுதியில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தை பார்வையிட்ட கலெக்டர், அங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர், நல்லவன் பாளையம் அடுத்த சமுத்திரம் பகுதியில் புதியதாக கட்டப்படும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய குடியிருப்பு கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைந்து முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேலத்திக்கான் பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் சுய தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகளிர் குழுவினர் நிர்வகிக்கும் அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தை பார்வையிட்டார். அப்போது, அங்கு தயாரிக்கப்படும் அப்பளங்களை, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு விடுதிகளுக்கு கொள்முதல் செய்யவும், விற்பனை வாய்ப்புகளை அதிகளவில் ஏற்படுத்தித் தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அதே பகுதியில் ரூ.5 லட்சம் பகுதியில் பிஎம் ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார். பின்னர், அழகானந்தல் ஊராட்சியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கறவை மாடு கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, கடன் வழங்கிய விபரம், கடன் திட்டத்தால் பயன் கிடைத்திருக்கிறதா என கலெக்டர் தர்ப்பகராஜ் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அழகானந்தல் ஊராட்சியில உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் தர்ப்பகராஜ், உணவு பொருட்களின் இருப்பு, விநியோகம் போன்றவை குறித்து ஆய்வு செய்தார். அங்கு பொருட்களை வாங்க காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், கீழ்கச்சிராப்பட்டு ஊராட்சியில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யப்பட்ட வயலை பார்வையிட்டார். அதன்மூலம், விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைப்பதாக தெரிவித்தனர். அதோடு, வேளாண் துறை திட்டங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறினார்.

பின்னர், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சியில் செயல்படும் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த மருத்துவ பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார். மேலும், அதே ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக தன்னார்வலர்கள் வழங்கும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அரசுடையாம்பட்டு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மரவள்ளிக்கிழக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.பின்னர், மெய்யூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு சிகிச்சை பெறும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தாய் சேய் நலன் தொடர்பாக சிறப்பான முறையில் ஆரம்ப சுகாதார நிலையில் செயல்படுவதாக அங்கிருந்த தாய்மார்கள் தெரிவித்தனர்.

நிறைவாக, கல்நகர் பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில், பல்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, தீயணைப்பு அலுவலர் சரவணன், பிடிஓக்கள் பிரத்திவிராஜ், பரமேஸ்வரன், வேளாண் இணை இயக்குநர் கண்ணகி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை இயக்குநர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.