கடந்த 4 மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தலைமையில் நேற்று, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில், அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான அனைத்து ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி, ஓட்டல் மற்றும் படகு குழாம்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பலதரப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றார்போல் உணவு வழங்கி விருந்தோம்பலில் சிறப்புடன் திகழவேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான ஊட்டி, கொடைக்கானல், முட்டுக்காடு உள்ளிட்ட 10 படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் 15,17,397 சுற்றுலா பயணிகளின் படகு சவாரி செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.