Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாரவிடுமுறை நாளான நேற்று ஏலகிரிமலை, ஜலகாம்பாறையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்

*நீண்டவரிசையில் காத்திருந்து படகுசவாரி

ஏலகிரி :வாரவிடுமுறை காரணமாக ஏலகிரிமலை மற்றும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலைமோதியது. ஏலகிரி படகு இல்லத்தில் நீண்டவரிசையில் காத்திருந்து ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாக திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் திரண்டனர்.

இதேபோல் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இயற்கை எழில் நிறைந்து காணப்படும் இம்மலை தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இம்மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, பறவைகள் சரணாலயம், கதவநாச்சியம்மன் கோயில், சாகச விளையாட்டு தளங்கள் உள்ளிட்டவை உள்ளது. இந்நிலையில் வாரவிடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் படகு இல்லம், பண்டேரா பறவைகள் சரணாலயம் ஆகியவற்றில் கூட்டநெரிசல் அதிகரித்திருந்தது.

கடந்த 2 நாட்களாக தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் அலைமோதினர். இதேபோல் அங்குள்ள கொண்டை ஊசி முனைகளில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலையடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அண்மைக்காலமாக அவ்வப்போது பெய்துவரும் மழைக்காரணமாக தண்ணீர் கொட்டுகிறது.

இதில் வாரவிடுமுறை நாளான கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை முதல் திரண்டு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அங்குள்ள முருகன் கோயிலிலும் தரிசனம் செய்தனர். வெளியூர் சுற்றுலா வாகனங்கள் தொடர் வருகையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.