Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விடுமுறையை கொண்டாட ஏற்காடு, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்

சேந்தமங்கலம் : வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஜில் என குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

காலை வேளையில் கடுமையான மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. மலைப்பாதையில் மேகக்கூட்டம் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 50 கொண்டை ஊசி வளைவுகளுக்கு மேல் கடுமையான மேகமூட்டம் காணப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரு, ஐதராபாத் மட்டுமின்றி திருச்சி, பெரம்பலூர், துறையூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

தொடர் மழையின் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தாவரவியல் பூங்கா மற்றும் சிக்குப்பாறை காட்சிமுனையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர்.

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் விடுமுறை தினத்தையொட்டி, நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடிஸ் சீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்தினை பூங்கா போன்ற இடங்களை குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர். மேலும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகையால், அவ்வப்போது ஏரி சாலை, அண்ணா சாலை போன்ற பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால், சாலையோர வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், டாக்சி டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இடைப்பாடி: குட்டி கேரளா என்று அழைக்கப்படும் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. விசைப்படகு போக்குவரத்தும் நடந்து வருகிறது.

விடுமுறை தினமான நேற்று, வெளி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், டெம்போ, டூவீலர்களில் அதிகளவில் வந்தனர். பின்னர், விசைப்படகில் குடும்பத்துடன் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் அங்குள்ள படித்துறை மற்றும் கைலாசநாதர் கோயில், மூலபாறை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், கோயில்பாளையம் பெருமாள் கோயில், கதவணைப்பாலம், வயல்வெளி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் காணப்பட்டது. மேலும் இங்குள்ள கடைகளில் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர்.

பில்லுக்குறிச்சி கிழக்கு கால்வாயிலும் தண்ணீர் செல்வதால், இப்பகுதியில் வெளி மாவட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகம் இருந்ததால், பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெறிச்சோடிய ஒகேனக்கல்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையறியாமல், நேற்று விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர்.

ஆனால், அருவிகளுக்கு செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு இருந்ததால், அவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், அங்குள்ள மீன் கடைகள், ஓட்டல்கள் வியாபாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.