Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

தண்டராம்பட்டு : ஞாயிறு விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது.

மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன்விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, தொங்கு பாலம், அறிவியல் பார்க், டைனோசர் பார்க், செயற்கை நீரூற்று, படகு குளம், முதலை பண்ணை, மயில் கூண்டு, முயல் கூண்டு ஆகிய இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் திறப்பு

பருவ மழை விட்டுவிட்டு பெய்ததாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று 114.75 அடியாக உள்ளது.

மேலும், அணையின் பாதுகாப்பு கருதி ஒன்பது கண்மதகு 11 கண் மதகு வழியாக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என உதவி செயற்பொறியாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.