ஊட்டி : விடுமுறை நாளான நேற்று ஓணம் விடுமுறையை கொண்டாட ஏராளமான கேரள சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்ததால் சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்பட்டது.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டியில் தற்போது இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். இதனிடையே கேரளாவில் பாரம்பரியம் மிக்க ஓணம் பண்டிகை அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
ஓணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், வெள்ளிகிழமை மாலை முதலே ஊட்டிக்கு கேரள சுற்றுலா பயணிகள் வர துவங்கினர். இந்த தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்களில் அறைகள் நிரம்பின.
இந்நிலையில், நேற்று பகலில் வழக்கத்திற்கு மாறாக இதமான காலநிலை நிலவியதால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் கேரள சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது.
ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஊட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. மதியத்திற்கு பின் கூட்டம் மெல்ல மெல்ல குறைய துவங்கியது.