*விடுமுறையில் ஏராளமானோர் திரண்டனர்
ஏலகிரி : வாரவிடுமுறை நாளான நேற்று ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக திரண்டு படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இம்மலையை ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது.
சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று ரசித்து பொழுதுபோக்குகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலைக்கு குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவதோடு மட்டுமின்றி அலுவலக சந்திப்பு உள்ளிட்ட கூட்டங்களையும் நடத்துகின்றனர். இம்மலைக்கு பயணம் செய்யும்போது மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.
தொடர்ந்து இங்கு முக்கிய சுற்றுலா தளங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டு தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக்குளம், ஸ்ரீகதவநாச்சியம்மன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்களை பார்வையிடுகின்றனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்றும் ஏலகிரி மலைக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அங்குள்ள படகு இல்லத்தில் நீண்டவரிசையில் காத்திருந்து உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் அங்குள்ள பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
ஏலகிரி மலை பின்புறத்தில் இயற்கையுடன் கூடிய லிங்க வடிவிலான முருகன் கோயில் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் திடீர் கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் டிட்வா புயல் காரணமாக மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் வாரவிடுமுறை நாளான நேற்று ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் உட்பட பலர் திரண்டு வந்தனர். இதனால் நீர்வீழ்ச்சி பகுதியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் இருந்தது.


