சென்னையில் இருந்து மூணாறுக்கு சென்றபோது வீட்டிற்குள் புகுந்தது சுற்றுலா பஸ்: 45 மாணவர்கள் உயிர் தப்பினர்
பட்டிவீரன்பட்டி: சென்னையிலிருந்து தனியார் கல்லூரியைச் சேர்ந்த 45 மாணவர்கள், நேற்று முன்தினம் கேரள மாநிலம், மூணாறு செல்வதற்காக சுற்றுலா பேருந்தில் புறப்பட்டுள்ளனர். பேருந்தை சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் (45) ஓட்டி வந்துள்ளார்.
நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கே.சிங்காரகோட்டை என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் முன்புற சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் வீட்டின் முன்பக்கச் சுவர் மற்றும் அங்கு நின்ற கார் சேதமடைந்தது.மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். படுகாயமடைந்த டிரைவர் மணிகண்டன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.