சுற்றுலா சென்றபோது லாரி மீது கார் மோதி தீப்பிடித்து சென்னையை சேர்ந்த 3 பேர் பலி: விக்கிரவாண்டியில் பயங்கரம்
விக்கிரவாண்டி: லாரி மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் மெகபூப் மகன் அப்துல் அஜீஸ்(25). இவரது சகோதரர் சம்சுதீன்(23). கொளத்தூரை சேர்ந்தவர்கள் தீபக்(25), ரிஷி(25), ஆவடியை சேர்ந்தவர் மோகன்(25). இதில் அஜீஸ் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியிலும் மற்ற 4 பேரும் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக 5 பேரும் காரில் திருச்சி சென்று கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சலையில் காலை 6.45 மணியளவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் சென்டர் மீடியனில் மோதி, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரை ஓட்டி வந்த அஜீஸ் இறங்கி, முன்னால் அமர்ந்திருந்த சும்சுதீனை வெளியே இழுத்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சம்சுதீன் அதே இடத்தில் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காரின் பின்னால் அமர்ந்திருந்த தீபக்கை வெளியே இழுத்தனர். அதற்குள் கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் காரில் மயங்கிக் கிடந்த ரிஷி, மோகன் ஆகிய இருவரும் தீயில் கருகி பலியாகினர். படுகாயமடைந்த அஜீஸ், தீபக் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கார் தீப்பற்றியது தம்பதி தப்பினர்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி சபிதா. அப்துல் காதருக்கு உடல்நிலை சரியில்லாததால் மனைவியை அழைத்துக் கொண்டு நாமக்கல்லில் இருந்து காரில் திருச்சிக்கு நேற்று காலை வந்தார். நாமக்கல்-திருச்சி சாலை முசிறி மஞ்சக்கோரை அருகே காலை 7.30 மணிக்கு கார் வந்தது. அப்போது காரின் முன்பகுதியிலிருந்து குபுகுபுவென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் காதர் காரை நிறுத்தி விட்டு மனைவியுடன் கீழே இறங்கினர். உடனே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்.