Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா விசாவில் வந்து சூர்யா பட ஷூட்டிங்கில் பங்கேற்பு; ரஷ்ய துணை நடிகர்கள் 113 பேர் வெளியேற்றம்: ஊட்டியில் உள்ள 3 தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

ஊட்டி: சுற்றுலா விசாவில் வந்து சூர்யா பட ஷூட்டிங்கில் பங்கேற்ற 113 ரஷ்ய துணை நடிகர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஊட்டியில் தங்கியிருந்த 3 தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் மாளிகையில் கடந்த சில நாட்களாக நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஷ்யாவை சேர்ந்தவர்கள் உள்பட 113 துணை நடிகர்கள் ஊட்டிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் சுற்றுலா பயணிகளுக்கான விசாவை மட்டும் பெற்றுக் கொண்டு ஊட்டியில் வந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்படடதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த ரஷ்ய துணை நடிகர்கள் ஊட்டியில் உள்ள சில தனியார் ஓட்டல்களில் தங்கி இருந்துள்ளனர்.

பொதுவாக, வெளிநாட்டவர் தங்கியிருந்தால், அவர்கள் தங்கியுள்ளதை உடனடியாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவே அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஓட்டல் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். ஆனால், வெளிநாட்டவர்கள் கடந்த பல நாட்களாக தங்கியிருந்தபோதிலும், அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த ஓட்டல் சார்பில் பார்ம் சி எனப்படும் ஆதாரத்தை காவல் நிலையத்திற்கு அளிக்காதது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல்களில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு துணை நடிகர்கள் உள்பட 113 பேரை உடனடியாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டனர். இதுபோன்று வெளிநாட்டவர்கள் ஓட்டல்களில் தங்கியிருந்தால், அவர்கள் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட 3 ஓட்டல் நிர்வாகத்திற்கும் நீலகிரி தனிப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அளித்து அறிவுரை வழங்கினர்.