Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தங்கும் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுரை

சென்னை: தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தரமான உணவுகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சிதம்பரம் (சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி பணிகள்), கோயம்புத்தூர் (கூட்டரங்கு கட்டட பணிகள்), காஞ்சிபுரம் (ஓட்டல் பராமரிப்பு பணிகள்) ராணிப்பேட்டையில் (கவேரிபாக்கம் ஏரி கட்டட பராமரிப்பு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மதுரை, திருச்சி, சென்னை, போன்ற மண்டலங்களில் உள்ள தங்கும் விடுதி, ஓட்டல்களில் வரவு, செலவுகளை சிறப்பாக கையாள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகளிடம் விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் பணியாற்ற வேண்டும்.

இதற்காக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவு விடுதிகள், படகு குழாம்கள் மூலமாக அதிக லாபம் ஈட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தங்கும் விடுதி அறைகளை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.