தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட ‘டைம்லஸ் தமிழ்நாடு’ ஆவணப்படத்திற்கு தேசிய விருது: தயாரிப்பு குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட ‘டைம்லஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப் படத்திற்கு 71வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த கலை, பண்பாடுக்கான படத்திற்கான ‘ராஜத்கமல்’ விருது அறிவிக்கப்பட்டதற்காக தயாரிப்பு குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், தமிழ்நாட்டை சர்வதேச அளவில் விரும்பத்தக்க சுற்றுலா மாநிலமாக மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2022ம் ஆண்டு சுற்றுலாத் துறையின் நிதி உதவியுடன் ‘டைம்லஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படம் செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்\\” நிறுவனத்தின் இயக்குனர் காமக்யா நாராயண சிங் தலைமையில் தயாரிக்கப்பட்டது. இப்படமானது சென்னை மற்றும் மாமல்லபுரம், தஞ்சாவூர் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் மதுரை, காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் ஒவ்வொரு இடத்திற்கும் 30 நிமிட காணொலியாக தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் டிராவல் எஸ்பி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த ஆவணப்படம் 2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் திரைப்படங்கள் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த கலை, பண்பாடுக்கான ‘டைம்லஸ் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படமாக தேர்வாகி ‘ராஜத்கமல்’ என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 முதல்வரால் 26.9.2023 அன்று முதன்முதலாக வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.72 கோடி ஆகவும், 2024ம் ஆண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 30.80 கோடி ஆகவும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முன்னோடி சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்ட கோயில்கள், அழகிய மலை சுற்றுலாத் தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வகைப்பட்ட சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதுபோன்ற பல்வேறு குறும்படங்கள் சுற்றுலாத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா சந்தைகள் மற்றும் விளம்பர முகாம்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வின்போது, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.