சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.12 கோடியில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.12 கோடியில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலா துறை சார்பில் தென்காசி மாவட்டம், குண்டாறு அணையில் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தளங்கள், வரவேற்பு மையம், உணவகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் ரூ.2.98 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுப் பகுதி, உணவகக் கட்டிடம் உள்ளிட்ட சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தில் ரூ.3.58 கோடியில் சுற்றுலாத்தலமாக மாற்ற ஏதுவாக கட்டப்பட்ட உணவகக் கட்டிடம், புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்குடா கடற்கரையில் ரூ.3.6 கோடி செலவில் சுற்றுலாத்தலமாக மாற்றிக் கட்டப்பட்ட பார்வையாளர்கள் கூடம், நிர்வாகக் கட்டிடம், வாகன நிறுத்துமிடம், நடைபாதை, படகுத்துறை உள்ளிட்ட பல்வேறு பணிகள், மதுரை மாவட்டம், ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் ரூ.7 கோடியில் கட்டப்பட்ட விருந்து மண்டபக் கட்டிடம், நவீன சமையலறைக் கட்டிடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய உணவகக் கட்டிடம் என மொத்தம் ரூ.18.12 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நிறைவுபெற்றன.
எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதேபோல், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களுடன் ஒத்திசையும் வகையில் முகப்புத் தோற்றம் நன்கு அழகுற வடிவமைக்கப்பட்டு, இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து காப்பாட்சியர்கள் மற்றும் அனைத்து அலுவலகப் பணியாளர்களுக்கான அறைகள், கூட்ட அரங்கு, பிற வசதிகளுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.6.84 கோடியில் 10,532 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.