ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மாடத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்வீட் வில்லியம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.இரண்டாம் சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக வந்து கொண்டிருக்கின்றனர். இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
பெர்ன் பூங்காவில் மலர் தொட்டிகளைக் கொண்டு சிறு சிறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர பதினைந்தாயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் பல்வேறு வண்ணங்களை கொண்ட மலர் செடிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இம்முறை மேரிகோல்டு, பேன்சி, சைக்ளோமென், டெய்சி, ஜெர்பரா, குட்டை டேலியா உட்பட பல்வேறு புதிய மலர் செடிகளும் இந்த மலர் அலங்காரத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதில், இம்முறை டையான்திசிஸ் தாவரவியல் இனத்தைச் சேர்ந்த ஸ்வீட் வில்லியம் மலர் செடிகளை கொண்ட 200க்கும் மேற்பட்ட தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த மலர்கள், மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.
ஒரே ஒரு இதழ்களைக் கொண்டு அழகாக காட்சியளிக்கிறது. இந்த மலர்கள் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் அந்த மலர்களையும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.